Tuesday, September 20, 2016

தூங்காமனம் - தருமராசா அஜந்தகுமார்

   
  
அ)
மாட்டுத் தாவணி பஸ்நிலையத்தில் அந்த நடுச்hமத்தில் வந்து இறங்கினோம். அப்பொழுதுதான் காலைப் பொழுது என்பது போல் வெகு உற்சாகமாக இருந்தது மதுரை மாநகரம்.  மதுரையின் இன்னொரு பெயரான தூங்காநகரம் என்பதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் தெளிவாகப் புரிந்தது. எனினும் கள்வர்களின் பயம் பற்றியும் சிலர் பயமுறுத்தி இருந்தததால் பைகளை இறுக்க அணைத்தபடி நடந்தோம். சாதாரண அறையில் தங்குவது இல்லையென்று முடிவெடுத்து தூரத்தில் பார்க்கும் போது டிஜிற்றல் பெயர் ஓடிக்கொண்டிருக்கும் வசதியான ஒரு ஹோட்டலில் அறையெடுத்து நிற்போம் என்று முடிவெடுத்தோம். ஒரு ஹோட்டலை நோக்கி எங்கள் கால்கள் விரையத் தொடங்கின.
வாகனங்களின் இரைச்சலைவிட மனதில் இரைச்சல் அதிகமாக இருந்தது. நாளை காலையிலேயே நாங்கள் சென்றுவிடுவோம் என்பதை வரவேற்பிற்கு நின்றவருக்கு எடுத்துக் கூறிப் பதிவினை நிறைவு செய்ய,  திறப்பொன்றுடன் எங்களுக்கு முன்னால் ஒருத்தர் சென்று கொண்டிருந்தார். அவர் அறையைத் திறந்து காட்டினார். இரண்டு கட்டில்கள், ஒரு சின்ன மேஜை, ரீ.வி எல்லாமே இருந்தன. நுளம்புத் திரிக்குப் பதிலாக புழழன niபாவ ஐத் தந்து புளக்கில் போடுமாறு கூறிவிட்டுச் சென்றார். ரீ.வியை போட்டுவிட்டோம். சன் நியூஸ் போய்க்கொண்டிருந்தது. டெங்கு பற்றிய செய்தியும் போய்க்கொண்டிருந்து. புழழன niபாவ போட்டுவிட்டேன். ஜன்னலைத் திறந்து பார்த்தேன். பெரிய அந்தக் ஹோட்டலின் பின்புறம் முழுவதும் பற்றையாக இருந்தது. ஜன்னலை மூடிவிட்டு நானும் நண்பரும் படுத்தோம். என்னை அறியாமல் தூக்கம் கண்களைத் தழுவியது. ஆனால் சிறிது நேரத்தால் நித்திரை கலைந்தது.ஒரே நுளம்பு. போர்த்திப் பார்த்தேன். சரிவரவில்லை. நண்பரைப் பார்த்தேன் அவரும் சொறிந்து கொண்டே இருந்தார். கடியும் சொறியுமாய் எப்ப விடிந்தது என்று தெரியாமலே விடிந்துவிட்டது. கதவு தட்டிக் கேட்டது. இரவு கூட்டிவந்து விட்டவர் நின்றார். என்ன அண்ண ஒரே நுளம்பு என்று சொல்லத் தொடங்க, ஐயோ சொறி சேர்! அதைத்தான் சொல்ல வந்தனான்,  குட்நைட்டிற்குள்  றீபில் வைக்க மறந்து போனன். 'ஸாரி சார் ஸாரி' என்றான். அவன் சொன்ன சொறி இரவு முழுவதுமான சொறியை மாற்றிவிடவும் தூக்கத்தைத் தந்துவிடவுமா போகிறது???
தூங்காநகரம் எங்களுக்குக்கும் தூங்காநகரம் என்பதை நிரூபித்துக் கம்பீரமாக நின்றது!


எனது கால்களின் கீழ் பூனையின் வயிற்றுப் பகுதி நசிபட அது வாயைத் திறந்து பெரிதாகக் கத்தியது அதன் கண்கள் மிகப் பயங்கர ஒளியை வீசின. கால் அமத்தலில் இருந்து விடுபட்டுக் கொண்டு அது என் முகத்தை நோக்கி ஒரு புலியைப் போல் பாய்ந்தது. ஐயோ!
என் முகமெல்லாம் இரத்தம் வழிவது போல் இருந்தது. இரண்டு கையாலும் துடைத்தேன். இரத்தம்; போலப் பிசுபிசுக்க என் நெஞ்சமெல்லாம் துடித்தது. நான் ஒரு பூனையின் வயிற்றுக்குள் இருப்பது போன்ற பிரமை சுழன்றது.
கட்டிலில் இருந்து கீழே இறங்கினேன்!
டேய்! டேய் என்ர கால்றா எண்ட சத்தம் அதன் பிறகுதான் எனக்கு விளங்கியது , அது கனவு. அந்த இரவை அன்றைய கனவு குலைத்துப் போட்டது. அன்றுடன் அந்த அறையில் இருந்து கட்டில் விடைபெற்றுக் கொண்டது.
அன்று என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. ஒரு பூனையைப் போல் இரவு முழுவதும் நண்பர்களின் கால்களை மாறி மாறி மிதித்து பேச்சு வாங்கிக் கொண்டும் நடந்து கொண்டிருந்தேன்!
இ)
நிலத்தில் படுத்திருந்தேன். திடீரென ஒரு சுணைப்பு. கைகள் தாமாகவே தொடையை வேகமாகச் சொறியத் தொடங்கின. சொறிந்த இடங்கள் தடிப்பதை உணர்ந்தேன். திடீரெனத் துள்ளி எழுந்தேன். கட்டியிருந்த சாறத்தை உதறினேன். சிறிய  மயிர்கொட்டி ஒன்று ஒட்டியிருப்பதைக் கண்டதும் மனம் துணுக்குற்றது.
கதவைத் திறந்து ஓடிச் சென்று கிளுவம் தடியொன்றை முறித்து அதன் இலைகளை உருவி கடித்த, தடித்த இடங்களெல்லாம் தேய்க்கத் தொடங்கினேன். தேய்த்து முடித்ததும் இன்னும் சொறி அதிகமாவது போல் ஒரு வேதனை படர்வது போல் உணர்ந்தேன். அம்மாவைத் தட்டியெழுப்பாமல் சுடு சாம்பல் பூசினால் நல்லது என்று எப்பவோ அம்மான்ர வாயால கேட்டது ஞாபகம் வர குசினிக்கு ஓடிப்போய் அடுப்படிச் சாம்பலை தொட்டுப் பார்த்தேன். மெல்லிய சூடு இருந்தது அதை எடுத்துத் தேய்க்கத் தொடங்கினேன். தேய்க்கச் சுகமாகவே இருந்தது. நிற்பாட்டியதும் சொறிந்த இடங்களில் மெலிதாக ஏற்பட்ட காயங்கள் சாம்பலில் இன்னும் கொதிப்பதை உணர்ந்தேன். ஒரே வழிகுளிப்புத்தான் எண்டு முடிவெடுத்து தொட்டித் தண்ணிய எடுத்து அள்ளி வார்க்கத் தொடங்கினேன். சுகமாகத் தான் இருந்தது. குளித்து முகத்தைத் துடைத்து விட்டு நேரத்தைப் பார்த்தேன்.
இரவு 1.40
ஆனால் இப்போது எங்கிருந்தோ ஓர் உற்சாகம் வந்திருந்தது. எதையாவது எழுதவேண்டும் போல் மனமும் கையும் பரபரத்தன.
நெடுநாளாக எழுத இருந்த சிறுகதை என்னை அறியாத ஒரு வேகத்துடன் தாள்களில் ஓடத்தொடங்கியது!
ஈ)
தூக்கம் என்பது ஒரு விழிப்பு நிலை என்கிறது பரந்தாமனின் பள்ளி கொள்ளும் தோற்றம். விழிப்பு நிலை கூட சிலருக்குத் தூக்கநிலைதான். தூங்குதல் என்றால் காலம் தாழ்த்துதல் என்ற பொருளும் அடங்கி இருக்கிறது. இதனை தூங்குக தூங்கிச் செயற்பால என்ற வள்ளுவன் வரிகள் உணர்த்திவிடுகின்றன. எம்மைச் சுற்றி நடக்கின்ற கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு தூக்கநிலைதான். பதினான்கு வருடங்கள் இராமனுக்காக கண்ணை இமை காப்பது போல விழித்திருந்த பார்த்த இலக்குவன் முடிசூட்டுவிழா நேரத்திலேதான் தன்னை அறியாமல் தூங்கினான். பாரமற்ற நிலையே உண்மையான தூக்கத்துக்கு இட்டுச் செல்கின்றது. படுக்கப் போறன், சாயப் போறன்,  கண்ண மூடப்போறன், சரியப் போறன், தூங்கப் போறன் என்று பல தொடர்களால் தத்தம் அனுபவத்திற்கேற்ப சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அடிமைத்தளையில் இருந்த பாரததேசத்திற்காகப் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாரதியார் பாடினார். இன்று இது எம் நாட்டுக்கும் தேவை போலத்தான் இருக்கின்றது.நாம் தூக்கத்தை மனதுக்குக் கொடுத்துவிடக் கூடாது. அது ஒரு விழிப்பு நிலையில் பூனையின் கண்களைப் போல எந்தச் சாமத்திலும் மினுங்கிக் கொண்டிருக்கவேண்டும்