தருமராசா அஜந்தகுமார்
அ)
1989
எங்கன்ரை வீட்டுக்கு முன்னாலதான் அந்தக் கடை இருந்தது. எனக்குக் காலைமை எழும்பின உடன அந்தக்கடைக்குப் போய் ரொபி வாங்கிறது சரியான விருப்பம். திடீரென நாயெல்லாம் பயங்கரமாக் குரைக்கத் தொடங்கியது. என்னெண்டே விளங்கேல்ல. கேற்றைத் திறந்து எட்டிப்பார்த்தேன,; பயந்துபோனன். பெரிய பெரிய சப்பாத்துகளோட தலைப்பாவோட குடுமியோட பெரிய இரும்புத் தொப்பியோட ஆமிக்காரர். அவங்கள் நேரே போய்க்கொண்டிருந்தாங்கள். கடை திறந்திருந்தது. கடை வேலவனைக் காணல்ல. அவங்கள் தாண்டிப்போனதும் கடைக்கு ஓடிப்போனன். அவற்ற முகம் பயத்தில வேர்த்திருந்தது. நான் ஐஞ்சு ரூபாவை நீட்டி ரொபி தாங்கோ எண்டன். 'உனக்கு இப்ப ரொபியோ? போய்க் கொப்பரட்ட வேண்டு' எண்டு பேசிப் போட்டார். எனக்குக் ஒரு மாதிரிப்போச்சு. சாக்குக்க கிடந்த ஒரு சக்கரைக்கட்டியை எடுத்துக்கொண்டு வீட்ட ஓடிவந்திட்டன். அம்மா சரியான பேச்சு. திடீரெண்டு எங்கேயோ வெடிச்சத்தம் கேட்டிச்சு, ஆக்கள் றோட்டால குழறிக்கொண்டு ஓடுறது கேட்டிச்சு. நான் அம்மாக்குப் பின்னால நிண்டன் அப்பா தலையைத் தடவிக்கொடுத்தார். எனக்குப் பயத்தில அழுகை அழுகையா வந்தது. கனநேரத்திற்குப் பிறகு எல்லாம் அமைதியாச்சு. தலையைச் சொறிவம் எண்டேக்கைதான் கையைப் பார்த்தேன். சர்க்கரை உள்ளங்கை எல்லாம் கரைஞ்சுபோய் பார்க்க அருவெருப்பாக இருந்தது. ஓடிப்போய்க் கையைக் கழுவிப் போட்டுத் தலையைச் சொறிஞ்சுகொண்டு நிண்டன். அப்பா கிட்டக் கூப்பிட்டுத் தலையைத் தடவிவிட்டார். அவற்றை கையை நான் இறுக்கிப் பிடிச்சன். சர்க்கரை கரைஞ்சமாதிரி என்ரை கண்ணில இருந்து தன்ரை பாட்டில கண்ணீர் வந்தது.
ஆ)
1994
பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அந்தக்கடைக்குப் போய்ப் பத்து ரூபாக்கு ரொபி வாங்கினன். பத்து மைலேடி ரொபி. வீட்ட நோக்கி நடக்கத் துவங்கினன். ரொபி தின்னேக்கை எனக்கு தனியே நடக்கோணும் போல இருக்கும். ஆக்கள் நிக்கேக்கை எண்டா அவங்களுக்குத் தெரியாமல் பொக்கற்றுக்க கையை விட்டு அதுக்கை வைச்சுச் சத்தம் போடாம உரிச்சு வெற்றிகரமா அதைப் பொக்கற்றுக்கு வெளியால எடுத்து தலையைச் சொறிஞ்சு பிறகு வாயடியில சொறியிற மாதிரிச் சொறிஞ்சு டக்கெண்டு கொட்டாவிவிடுற மாதிரி வாயைத்திறந்து ரொபியை உள்ளுக்கை தள்ளி பேந்து அதை உமியேக்க ஆரும் கண்டா ஒண்டுதான் இருந்தது எண்டு சொல்லி அமசடக்காச் சிரிக்கோணும். தனிய எண்டா உரிச்சு உரிச்சு திண்டு கொண்டே இருக்கலாம். ரொபித்தாளை வடிவா விரிச்சிட்டு அதை ஊதிவிட அது பறக்கிறதப் பார்த்துக்கொண்டே அடுத்த ரொபியை உரிக்கத் தொடங்கலாம். ஒன்பது ரொபியும் வீட்ட போறதுக்கிடையில் திண்டிட்டன். கடைசி ரொபியைப் பக்குவமா எடுத்தன். ஆறுதலா உரிச்சு வாயுக்கை போட்டு உமிழத் தொடங்கினன். இவ்வளவு நேரமும் அவசரப்பட்டு கடிச்சுத் திண்ட எனக்கு இது அமிர்தம் போன்ற சுவையைக் காட்டத் தொடங்கியது. உமிழ உமிழ முடிகிறதே எண்டு கவலையும் வந்தது. அடிவரையான சுவையும் முழுதாகப் புலப்படத் தொடங்கியது. இனிமை. இனிமை. இனிமை.
இ)
1996
என்ரை இடக்கையை அவர் இறுக்கிப் பிடித்திருந்தார். எனக்குக் காற்சட்டை நனைஞ்சிடும் மாதிரிக் கிடந்தது. அவருடைய முகம் எனக்கு விகாரமாகத் தெரிந்தது. அவர் பற்களை நெறுமிக் கொண்டார். அவருடைய வலக்கையில்; ஒரு தடித்த குட்டிப் பிரம்பு இருந்தது. 'உனக்கு களவெடுத்து இனிப்புத் தின்னக் கேக்குதோ?' எண்டு அடிக்கத் தொடங்கினார். உள்ளங்கையில் இடிவிழுவதைப் போல இருந்தது. கண் கரையிற மாதிரிக் கிடக்கு. திடீரெண்டு பார்த்தன் ஜன்னலுக்குள்ளால பொன்னம்மா அக்கா எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறது தெரிஞ்சது. எனக்கு பெரிய மானக்கேடு ஆகிற மாதிரிக் கிடக்கு. இப்ப கையை விட்டார். அவர் என்ரை மாமா. நான் நல்லாப் படிக்கோணும் எண்டுட்டு இவற்ற வீட்டை கொண்டு வந்து விட்டவர். எனக்கு இங்க வந்தோண்ண ரொபி சாப்பிட வழி இல்லாமல் போச்சு. அண்டைக்கு சாமியறைக்க கும்பிடேக்கைதான் பார்த்தன். ஒரு அம்பது ரூபா கனகாலமா அங்க கிடக்கு. அதைச் சுருட்டி எடுத்து விளையாட்டுக் காட்டிப் போட்டன். இந்தாள் பிடிச்சுப் போட்டுது. அன்ரி கொண்டந்து தேத்தண்ணி தந்தா, வாங்கினனன். நல்லாச் சுட்டுது. குடிச்சன் இனிப்புக் காணாமல் இருந்தது. நான் ஒண்டும் சொல்லாமல் குடிக்கத் தொடங்கினன்.
ஈ)
இனிப்பு என்பது நாவில் மட்டுமல்ல உள்ளத்திலும் இனிப்பது. சில விடயங்கள் வெளியில் இனிக்கின்றன. சில விடயங்கள் உள்ளில் இனிக்கின்றன. நினைவுகள்,இலக்கியம் கூட இனிக்கவே செய்கின்றது. சில கனவுகளும் இனிக்கின்றன. எமது செயல்களும் இனிக்க வைக்கின்றன. உண்டு வரும் மகிழ்ச்சியை விட உள்ளத்தே நினைத்துவரும் மகிழ்ச்சி மேலானது. இதனை வள்ளுவர் காமத்துப் பாலில், 'உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.'(உள்ளுதல் - நினைத்தல்) என்கின்றார். இதனையே இன்று நினைத்தாலே இனிக்கும் என்கிறோம். நாமே நமக்கு இனியராய் இருப்பதும் நம்மிலும் இனியன் என்று இறைவனை அடையாளம் கொள்வதும் ஆத்மிகத்தின் அலைவரிசையாகிறது. இதனை அப்பர் சுவாமிகள்,
'என்னில் யாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.' என்று பாடியுள்ளார். மொழி, கலாசாரம், வாழ்வு எல்லாமே நமது விருப்புகளால் இனிமையாகின்றன. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறான் பாரதி. பாரதிதாசனுக்கு எல்லா இனிமையை விடவும் தமிழே இனித்தது. வாழ்வே இனிமைதான். அதிலும் இன்பம் மட்டுமல்ல துன்பமும் ஒரு அனுபவ இனிமைதான். இனிமை நாவிலும் வாழ்விலும் கணந்தொறும் கணந்தொறும் கலந்து அனுபவிக்க வேண்டியது. கடலின் அலை போல காதலுடன் ஓடி வந்தபடியே இருக்கிறது. கால்களில் பரவும் ஈரம் தலையில் ஏறி வானத்தை எம் கையில் வீழ்த்திச் சிரிக்கிறது.