Saturday, October 22, 2011

கி.அ.சச்சிதானந்தனுடன் ஒரு பொன்மாலைப் பொழுது

இன்று காலையில் அறிவோர் கூடல் குலசிங்கம் அண்ணர் அழைப்பினை ஏற்படுத்தி இன்று மௌனியின் கதைகளைப் பதிப்பித்து வெளியிட்ட அவருடன் நெருக்கமான கி.அ.சச்சிதானந்தன் வருகின்றார். எங்கள் வீட்டில்தான் 2 நாட்கள் நிற்கப் போகின்றார் . இன்று 5 மணியளவில் நண்பர்கள் அவருடன் கூடிக்கதைப்போமே என்றார். சரி என்றேன். நான் செல்வதற்கு 6 மணியாகிவிட்டது. 10 பேர் இருந்து அவருடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சற்றுநேரத்தில் குலசிங்கம் அண்ண, நீங்கள் கேளுங்கள் அவர் அது தொடர்பில் கதைக்கட்டுமே என்றார்.

பார்த்த உடனேயே கவரும் உருவம்..72 வயது  என்பதை நம்ப மறுக்கும் துடிப்பு, புன்னகை வீசியபடி வசீகரத்துடன் உரையாடத் தொடங்கினார்...குப்பிழான் ஐ.சண்முகன் மௌனி பற்றித் தொடங்கினார். அதன் பிறகு சச்சிதானந்தனின் பேச்சு மௌனியில் இறங்கி பின் தஸ்தாவெஸ்கி சென்று இமயமலை ஏறி ஆனந்தகுமாரசாமி என்று மிக அழகாக ஆழமாக அலட்டலின்றி எங்களை 2 மணிநேரம் கட்டி வைத்திருந்தார்.

அவர் பேசியவற்றில் மிக சுவாரசியமானவற்றை தொகுக்க முயற்சிக்கிறேன்.

1.மௌனி பற்றி....


மௌனி 16, 18 கதைகளை எழுதியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர். அவரைச்சுற்றி 10 பேருக்கு கிட்ட இருந்தாலும் அவருடன் இறுதிவரை இருந்தவன் நான். கதைகளை எழுதிக் குவிக்க வேண்டும் என்று பரபரக்க மாட்டார் எப்போதும் கதைக்காக மிகவும் பாடுபடுபவர். வெட்டி கொத்தி மிகவும் பண்படுத்தப் போராடுவார் .திருப்தியடையவே மாட்டார். அவரு்டைய கதைகளில் நாம் முடிவை எதிர்பார்க்கத் தேவையில்லை..முடிவை நோக்கிய அஞ்சலோட்டத்திற்கு அவர் கதைகள் காத்து நிற்பதில்லை. எமக்குத் தேவையான ஒரு பந்தியை வாசித்தாலே போதும் . எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்னும் போது அது எழுப்பும் உணர்வும் பரவசமும் சாதாரணமானதா?

தன்னால் தமிழுக்கு நிறைய செய்ய இருக்கிறது செய்ய வேண்டும் என்று பரபரத்தவர். அவருடனான எனது அனுபவங்கள் அலாதியானவை.

அ)
பிராமணன் தர்மம் செய்யக்கூடாது அது பாவம்

நானும் அவரும் ஹோட்டலுக்கு சாப்பிடப்போவோம்...கிறுக்காக இருப்பது அவருக்கு மிகவும்   பிடிக்கும்..இனிப்பு காரம் என்று மாறி மாறி இருவரும் சாப்பிடுவோம்...சாப்பிட்டு முடிந்தவுடன் பணம் நிரம்பிய தன் பர்ஸை என் கையில் திணிப்பார். நான் கல்லா மேசைக்கு சென்று பணம் கொடுக்க பர்ஸை திறக்கும் நேரத்தில் அதை அப்படியே பறித்துவிட்டு பிராமணன் பிச்சை எடுத்துத்தான் சாப்பிடணும் ஆனா தர்மம் செய்யக்கூடாது அது பாவம் என்று சொல்வார்..இப்படி எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?????

ஆ)
அப்பாவின் உண்மையைக் காப்பாற்றக் குடித்தேன்

மௌனியைக் கேட்டேன் நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்....“ எனது அப்பா ஒரு பொழுதும் பொய்பேசுதில்லை..ஒருநாள் யாருடனோ கதைக்கும் போது இவன் குடிக்கிறான் போல...என்று பேசுவதைக் கேட்டேன்...அதுவரை குடியாத நான் அப்பாவின் வார்த்தை பொய்யாகக் கூடாது என்று குடித்தேன்...” என்றார்.


இ)
முன்னறிவிப்பின்றி இனி மேல் வா

மௌனிக்கு ஒரு ஞாயிறு வருவதாகக் கூறியிருந்தேன். ஆனால் என்னால் அன்று செல்ல முடியவில்லை. அடுத்த நாள் சென்றேன். அவர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தார்.  ஏனென்று கேட்டேன். நீ நேற்று வருவதாகக் கூறியிருந்தாய்...நீ வரவில்லை..நீ வந்த ரெயில் அக்சிடன்ற் ஆகியதோ நீ செத்துவிட்டாயோ என்று எவ்வளவு யோசித்து விட்டேன் ..நீ இனிமேல் முன்னறிவிப்பின்றி வா என்று அவர் கூறிய போது அவருக்குள் இருந்த ஒரு மனிதனைக் கண்டேன்..


ஈ)
எழுதி உழைக்காத நான் மௌனி பற்றி பேசி உழைத்தேன்

என்னை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு 32 வயது இளைஞர் சந்திக்க வந்திருந்தார். மௌனி கதைகள் பற்றி ஆய்வு செய்யப் பொகிறேன் என்றார்....அவருடன் நான் நிறைய உரையாடி ஒத்துழைத்தேன். 10000 ரூபாய் தந்தார்.

இவ்வாறு பல அனுபவங்களைக் கூறியவர் மௌனியின் சொந்த வாழ்க்கையின் சோகங்களைக் கூறிய போது அவரது கண்கள் பனித்தன. 4 புதல்வர்களில் 2 புதல்வர்களை இழந்த புத்திர சோகத்தையும் ஒரு மகன் மனநோளாளியான அவலத்தையும் ஒரு மகனை அமெரிக்காவிற்கு சோதிடம் பார்த்து அனுப்பியதையும் கண்ணில் நீராடக் கூறினார். இறுதிக்காலத்தில் ஒரு நாள் சென்ற போது தவழ்ந்து வந்து கதவைத் திறந்த மௌனி இனி என்னைப் பாரக்க வரும் தேவை உன்க்கு இல்லை எனக் கூறியதாய் சொன்னார்.


2.
தஸ்தாவெஸ்கி

கீழைத்தேசத்தில் மௌனி பற்றிச் சொன்னீர்கள். இனி மேலைத் தேசத்தில் தஸ்தாவெஸ்கி பற்றிக் கூறுங்கள் என்று குலசிங்கம் அண்ணர் கூறியதும் சற்று கண்களை மூடிவிட்டு பேசத் தொடங்கினார்.

அ)  
இவரை மூலமொழியில் படிப்பதற்காகவே ரஸ்ய மொழியைப் படிக்க விரும்பினேன்

ஆ)
 இவரது நாவல்களை நான் மொழிபெயர்த்தும் இருக்கிறேன்....மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ளதை அப்படியே 100 வீதம் அப்படியே கொண்டு வந்துவிட முடியாது. க.நா.சு சொன்ன ஒன்று ஞாபகம் வருகிறது..” உயிரைக் காப்பாற்று்ம் வைத்தியர்கள் தாம் சித்தியடையும் பரீட்சையில் சித்திக்குரிய புள்ளியைப் பெற்றாலே போதும் 100 பெறவேண்டியதில்ல ...இதில் நாம் 65 வீதம் தேறினாலே சித்திதான்...படைப்பின் உயிரைக் காப்பாற்றி விடுகிறோம்”


மொழிபெயர்புகளை 1500 பக்கங்களைத் தொடும்போது பதிப்பிக்க முடியாமலட அல்லாடும் அனுபவங்களை தான் சலியாமல் எழுதிக்கொண்டே இருக்கும் தன்மையை மிக இரசனையாக எடுத்துரைத்தார்.



3.
இமயமலை


இவ்வாறு இவரது பேச்சு சென்று கொண்டிருந்த போது செல்லக்குட்டி கணேசன் அவர்கள் உங்கள் இமயமலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் என்றார்


சிறுவயதில் நான் செங்கல்பட்டில் படித்துக் கொண்டிருந்தபோது சனிக்கிழமைகளில் அங்கு ஒரு குன்று இருந்தது அதில் தனிமையில் சென்று இருக்கும் போது ஒரு பரவசத்தை உண்ர்ந்தேன். அந்தநாட்களில்தான் கடவுளைக் காணவேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றத்தில் இதற்காகவே ஒரு சாமியாரிடம் சேர்ந்தேன். அவரும் கடவுளை காட்டுகிறேன் என்று காட்டவில்லை.


இமயமலைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட அனுபவம் பரந்தது வார்த்தைகளுள் அடைபடாது..உயர உயர செல்லும் போது ஏற்படும் கிளர்ச்சியும் பனிக்கட்டிகள் சூரிய ஒளியில் வைரங்களாய் ஜொலிப்பதும் உயர் மலயில் நிற்கும் போது “நட்சத்திரங்கள் இதோ எட்டும் துாரத்தில் இருக்கின்றன..இந்த நட்சத்திரங்களைப் பறித்து விடலாம் பறிக்கலாம் என்று ஏற்பட்டது“ என்று அவர் கூறிய விதம் ஒரு கவிதானுபவத்தை எம்முள் கிளர்த்தியது.


4. கலாயோகி

உண்மையில் கொழும்பில் இந்துகலாசார அமைச்சில் நடந்தவிழாவில் கலாயோகி ஆனந்தகுமாரசாமி பற்றிப் பேசவே அவர் வந்திருந்தார். அவரின் முழு எழுத்துக்களும் தன்னிடம் உள்ளதையும் அதை பிரதி செய்ய இலங்கைப்பல்கலைக்கழக நுாலகங்களுக்கு கூறியதாகவும் சொன்னார். சுவாரசியம் என்னவென்றால் இவர் மீதான ஈடுபாட்டால் தனது மகனுக்கு ஆனந்தகுதாரசாமி என்ற பெயரையே வைத்தாராம். ஆத மாத்திரமன்றி மகனின் திருமண வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஆனந்த குமாரசாமி எழுதி தான் மொழிபெயர்த்த சிவானந்த நடனம் என்ற புத்தகத்தினை வழங்கியதாகவும் சிலர் இந்த வயதில் உங்கள் மகன் இப்படி எழுதியிருக்கிறானே என்று கூறியதாகவும் நகைச்சுவை ததும்பக் கூறினார்.

இவ்வாறு பல விடயங்கள் பற்றி கதைத்து இன்று மீனவர்களை பருத்தித்துறையில் சந்தித்ததையும் கூறினார்.அம்மாவிடம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க முடியாத இயலாமையையும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார். சசிகலாவின் வழக்கு பற்றி கதை வந்தபோது சசிகலாவின் வழக்கில் 8000 பக்கங்களில் குற்றப்ப்ததிரம் எழுதப்பட்டதாம். அதுவும் ஆங்கிலத்தில். இந்திய சட்டத்தில் உரிமை இருப்பதால் தானே வாதாடப் போவதாக கூறிய சசி தனககு ஆங்கிலம் தெரியாது என்றும் தமிழில் பெயர்க்கும் படிகூறியதாகவும் அந்தப்பணியால் அது குப்பைக்குள் சென்று விட்டது என்றும் பல விடயங்களிலும் இறங்கி எழுந்தது உரையாடல்..



நேரம் இரவு எட்டைத் தொடத்தொடங்கியது ...நீங்கள் கதைக்கவே இல்லை என்னோடு கோபமா என்று எல்லோரையும் தனித்தனியே வாஞசையோடு தழுவினார். இறுதியில் புகைப்படம் எடுத்துக் கலைந்தோம்...


உண்மையில் இன்றை பொழுது மிக ஆரோக்கியமாக நிறைந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஒருவருடன் கழிந்தது மிக்க நிறைவைத்தருகிறது...குலசிங்கம் அண்ணாவுக்கும் எல்லொருக்கும் நன்றிகள்

அன்புடன்
த.அஜந்தகுமார்
(குறிப்பெடுக்காது நினைவோடையில் இருந்து எழுதியதால் ஏற்பட்டிருக்க கூடிய சில பிழைகளுக்கு வருந்துகிறேன்)

No comments:

Post a Comment