Friday, November 11, 2016

நாவலும் ஆவலும்


அ)
எனக்குப் பள்ளிக்கூடத்திலயும் கொஞ்சம்தான் தாறவங்கள். காணுதோ காணுறேல்லயோ யாரட்டையும் கேட்கிறதில்ல. எப்ப வீட்டுப் பூசை வருமெண்டு காவல் இருப்பன். அண்டைக்கு அத்தையவைதான் கடலை, அவல், மோதகம் எல்லாம் செய்துதந்தவை. அம்மா தொடமாடடவாம். அப்பாவும் நானும் தங்கச்சியாக்களும் சேர்ந்து படையல் வேலையத் தொடங்கினம். அம்மா வீட்டுக்கு வெளியில நிண்டு ஏவிக்கொண்டு நிண்டா. நாவல் பழம், விளாம்பழம் கூடப் படைச்சிருந்தம். உண்மையைச் சொன்னா வாயூறி வாயூறி படைச்சம். விளக்குக் கொழுத்தி, கற்பூரத்தையும் கொழுத்தி சாம்பிராணி புகையை காட்டினம். புகை அழகழகாக நெளிஞ்சு மூக்கைத் தொடைக்N;கதான் அந்தச் செய்தியை அத்தை கடவையடியில நிண்டு கொண்டு சத்தமாச் சொன்னா. இயக்கம் எல்லாரையும் உடனடியா இங்க இருந்து போகட்டாம். அம்மா கத்திக்கொண்டு உள்ள வந்தா. பத்திரகாளியம்மன் பூசையறைக்கை வந்தது மாதிரிக்கிடந்தது. பெட்டிக்கே இருந்த இரண்டு மூன்று நகைகளையும்(தாலிக்கொடி அப்பேக்கை அடைவு) எல்லாற்றை உடுப்புகளையும் முக்கியமான சாமான்களையும் இழுத்து மூன்று பெட்டிக்கை அடுக்கினா. சிலதுகளை உரப்பையுக்கை அடுக்கினா.  எதென்மராட்சியில இருக்கிற மந்துவில் அம்மம்மா வீட்டை போறதுதான் திட்டம் என்பது அம்மாவின் சொற்பொழிவில் இருந்து புலனாகியது.அப்பாவையும் துரிதப்படுத்தினா. சைக்கிள்ள பெட்டியளக் கட்டிப்போட்டு கடைசித் தங்கச்சியை அப்பா சைக்கிள் முன்னுக்கு ஏத்தினார். படைச்சது எல்லாத்தையும் ஒரு பையுக்கை எடுத்துக்கொண்டு வாவன் எண்டு அம்மா பேசினா. நாவல் பழத்தை மட்டும் இரண்டு பொக்கற்றுக்கையும் அடைஞ்சுகொண்டு பையை நீட்டினன். அம்மா ஓடிப்போய் ஆடு, மாடுகளுக்கு புல்லுகளைக் கொட்டிப்போட்டு ஓடி வந்தா. அவவுக்கு எப்படியும் இரண்டுநாளுக்க வந்திடுவம் எண்டு நம்பிக்கை. அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வெளியிவ போனா. நாங்கள் ஒரு திகைப்பிலதான் இருந்தம். றோட்டெல்லாம் சனமும் சத்தமும் இருட்டும். அப்பா சைக்கிள உருட்டிகொண்டு வர நாங்கள் பின்னால போனம். அம்மான்ரை தலையில உரப்பை. முள்ளிவெளி எண்டு சொல்லிச்சினம். அந்த வெளியும் இருட்டும் சனமும் கதையும்; தலையைச் சுத்திற மாதிரி இருந்திச்சு. பத்தையளுக்கு மேலே ஏதோ பூச்சியள் மினுங்கிக்கொண்டு இருந்திச்சு. பாத்துக்கொண்டிருக்க சில நட்சத்திரங்கள் மண்ண நோக்கி விழுந்துகொண்டு இருந்திச்சு. இதுதான் எரிநட்சத்திரமோ எண்டு நினைச்சுக்கொண்டு பொக்கற்றுக்க கையை விட்டு நாவல்பழத்தை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினன். அந்த இருட்டுக்க நாக்கை இழுத்துக் கலர் பாக்கேலாத கவலையை யாரட்டைச் சொல்லிறது. நடந்துகொண்டிருந்தம்.
ஆ)
இன்னும் கொப்பி முடிய நாலுபக்கம்தான் இருக்கு எண்டுறது பெரிய புளுகமாக இருந்தது. கொஞ்சம் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கினன். இண்டைக்குக் கொப்பி முடியாது என்பது எவ்வளவு பெரிய கவலையாக் கிடக்குது. இண்டைக்கு அந்தக் கிழவியைக் காணேக்கை எனக்குக் கவலை வரப்போகுது. இந்த ரீச்சருக்குக் கனக்க எழுதத்தரத் தெரியாது. என்னத்தைப் படிப்பிக்கினம். என்னைவிட்டா 'அ'னாவையே ஒரு பக்கத்தில எழுதுவன். அப்படி எழுதிறதுதான் நல்லது எண்டு இந்த ரீச்சருக்குத் தெரியாது. கோட்டுக்க எழுதோணும் எண்டு பேசிக்கொண்டும் காதைப் பிடிச்சுக்கொண்டும் நிற்பா. எண்டாலும் நாளைக்குக் கொப்பி முடியும்தானே என்ற நினைப்பு சுகமாத்தான் இருந்தது. கொப்பி முடிஞ்சிருந்தது. பள்;ளிக்கூடம் விட்டோண்ண வெளியில ஒடினன். கிழவியட்ட ஆரோ இரண்டு பெடியள் காசைக் கொடுத்து வாங்கிக்கொண்டு நிண்டினம். கிழவி கொப்பிக்கு எனக்குத் தரும் எண்டு நிpனைச்சிக்கொண்டே நீட்டினன். இந்தாடாப்பா எண்டு ஒரு சரை நாவல்பழத்தைச் சுற்றித் தந்தா. அதைப் பிரிச்சுச் சாப்பிட்டுக்கொண்டு நடக்கத்தொடங்கினன். 'நாளைக்கு எழுதத் தொடங்கிற கொப்பி வேளைக்கு முடியோணும் கனக்க எழுதத் தாற ரீச்சர் எங்களுக்கு வரவேணும்'
இ) எனக்குள் அது ஒரு பெருங்கனவைப் போல் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கின்றது. ஒரு சுடரைப்போல என்னுடன் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்பாவின் கதையை ஒரு நாவலாக்கவேண்டும் என்பதுதான் அது. அப்பாபிறக்கப் போற நேரத்தில அப்பப்பா ஓடிப்போய் வைரவர் கோயில்ல ஒரு சுடர் ஏற்றினவராம் 'நல்ல பிள்ளையாப் பிறக்கோணும் எண்டு' அப்பா செத்த அண்டைக்கு அவற்ற தலைமாட்டில ஒரு சுடரை ஏத்தி நாங்க வைச்சனாங்கள். அந்தச் சுடரில் இருந்து இந்தச் சுடர்வரைக்குமான அப்பான்ரை வாழ்க்கை அந்த இருளை வெளிச்சத்தை வெளியில கொண்டுவர எத்தனையோ நாளாக நானும் முயல்கிறேன்.
தூண்டிற் புழுவினைப் போல
வெளியே சுடரினைப் போல்
நீண்ட பொழுதாக என்
நெஞ்சம் துடித்ததடி
என்று பாரதி காதலில் பாடியது என் நாவலிற்கும் பொருந்துவதாய் உள்ளது. ஒரு கொப்பியை இதற்கென்றே எடுத்துவைத்தேன். எழுதத் தொடங்கினேன்தான். ஆனால் அது சில நேரம் கட்டுரைபோல மாறிவிடும். சிலநேரம் முயலாகும். சிலநேரம் ஆமையாகும். ஆமை வருவது வீட்டுக்குத்தானே கூடாது நாவலுக்கு நல்லதுதானே என்று சில நேரம் ஊறட்டும் என்று காவல் இருப்பேன். ஆனால் எழுதியவை திருப்திதராமல் போகக் கிழித்து எறியத் தொடங்கினன். வாங்கி வைத்த கொப்பியில் இன்னும் நாலுபக்கம்தான் இருக்கிறது. புதுக்கொப்பிவாங்கத்தான் வேணும்.
ஈ)
இரண்டு நாவல்களுமே நினைவைத் தருகின்றது. நாவல் பழம் ஒரு காலத்திற்குரியது. நாவலும் ஒரு காலத்திற்குரியதுதான். பொக்கற்றுக்க வைச்சு நான் நாவல்பழம் சாப்பிட்டதாலேயோ என்னவோ நாவலிலும் பொக்கற் நாவல் இருக்குது பாருங்கோ. எங்கன்ரை பக்கத்து வீட்டில முன்னுக்கு ஒரு நாவல் நிண்டது. அதை ஒரு அளவோடு வெட்டி அந்த நாவல்ல ஜம்புமரத்தை ஒட்டுக்கன்றாக்கி இப்ப நல்லாக் காய்ச்சுக்கொட்டுது. நானும் நாவல ஒடடுக்கன்றாக்கி சிறுகதை, கவிதையாவது எழுதுவம் எண்டு பாக்கிறன்.

No comments:

Post a Comment