Friday, November 11, 2016

நாவலும் ஆவலும்


அ)
எனக்குப் பள்ளிக்கூடத்திலயும் கொஞ்சம்தான் தாறவங்கள். காணுதோ காணுறேல்லயோ யாரட்டையும் கேட்கிறதில்ல. எப்ப வீட்டுப் பூசை வருமெண்டு காவல் இருப்பன். அண்டைக்கு அத்தையவைதான் கடலை, அவல், மோதகம் எல்லாம் செய்துதந்தவை. அம்மா தொடமாடடவாம். அப்பாவும் நானும் தங்கச்சியாக்களும் சேர்ந்து படையல் வேலையத் தொடங்கினம். அம்மா வீட்டுக்கு வெளியில நிண்டு ஏவிக்கொண்டு நிண்டா. நாவல் பழம், விளாம்பழம் கூடப் படைச்சிருந்தம். உண்மையைச் சொன்னா வாயூறி வாயூறி படைச்சம். விளக்குக் கொழுத்தி, கற்பூரத்தையும் கொழுத்தி சாம்பிராணி புகையை காட்டினம். புகை அழகழகாக நெளிஞ்சு மூக்கைத் தொடைக்N;கதான் அந்தச் செய்தியை அத்தை கடவையடியில நிண்டு கொண்டு சத்தமாச் சொன்னா. இயக்கம் எல்லாரையும் உடனடியா இங்க இருந்து போகட்டாம். அம்மா கத்திக்கொண்டு உள்ள வந்தா. பத்திரகாளியம்மன் பூசையறைக்கை வந்தது மாதிரிக்கிடந்தது. பெட்டிக்கே இருந்த இரண்டு மூன்று நகைகளையும்(தாலிக்கொடி அப்பேக்கை அடைவு) எல்லாற்றை உடுப்புகளையும் முக்கியமான சாமான்களையும் இழுத்து மூன்று பெட்டிக்கை அடுக்கினா. சிலதுகளை உரப்பையுக்கை அடுக்கினா.  எதென்மராட்சியில இருக்கிற மந்துவில் அம்மம்மா வீட்டை போறதுதான் திட்டம் என்பது அம்மாவின் சொற்பொழிவில் இருந்து புலனாகியது.அப்பாவையும் துரிதப்படுத்தினா. சைக்கிள்ள பெட்டியளக் கட்டிப்போட்டு கடைசித் தங்கச்சியை அப்பா சைக்கிள் முன்னுக்கு ஏத்தினார். படைச்சது எல்லாத்தையும் ஒரு பையுக்கை எடுத்துக்கொண்டு வாவன் எண்டு அம்மா பேசினா. நாவல் பழத்தை மட்டும் இரண்டு பொக்கற்றுக்கையும் அடைஞ்சுகொண்டு பையை நீட்டினன். அம்மா ஓடிப்போய் ஆடு, மாடுகளுக்கு புல்லுகளைக் கொட்டிப்போட்டு ஓடி வந்தா. அவவுக்கு எப்படியும் இரண்டுநாளுக்க வந்திடுவம் எண்டு நம்பிக்கை. அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வெளியிவ போனா. நாங்கள் ஒரு திகைப்பிலதான் இருந்தம். றோட்டெல்லாம் சனமும் சத்தமும் இருட்டும். அப்பா சைக்கிள உருட்டிகொண்டு வர நாங்கள் பின்னால போனம். அம்மான்ரை தலையில உரப்பை. முள்ளிவெளி எண்டு சொல்லிச்சினம். அந்த வெளியும் இருட்டும் சனமும் கதையும்; தலையைச் சுத்திற மாதிரி இருந்திச்சு. பத்தையளுக்கு மேலே ஏதோ பூச்சியள் மினுங்கிக்கொண்டு இருந்திச்சு. பாத்துக்கொண்டிருக்க சில நட்சத்திரங்கள் மண்ண நோக்கி விழுந்துகொண்டு இருந்திச்சு. இதுதான் எரிநட்சத்திரமோ எண்டு நினைச்சுக்கொண்டு பொக்கற்றுக்க கையை விட்டு நாவல்பழத்தை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினன். அந்த இருட்டுக்க நாக்கை இழுத்துக் கலர் பாக்கேலாத கவலையை யாரட்டைச் சொல்லிறது. நடந்துகொண்டிருந்தம்.
ஆ)
இன்னும் கொப்பி முடிய நாலுபக்கம்தான் இருக்கு எண்டுறது பெரிய புளுகமாக இருந்தது. கொஞ்சம் பெரிய எழுத்தாக எழுதத் தொடங்கினன். இண்டைக்குக் கொப்பி முடியாது என்பது எவ்வளவு பெரிய கவலையாக் கிடக்குது. இண்டைக்கு அந்தக் கிழவியைக் காணேக்கை எனக்குக் கவலை வரப்போகுது. இந்த ரீச்சருக்குக் கனக்க எழுதத்தரத் தெரியாது. என்னத்தைப் படிப்பிக்கினம். என்னைவிட்டா 'அ'னாவையே ஒரு பக்கத்தில எழுதுவன். அப்படி எழுதிறதுதான் நல்லது எண்டு இந்த ரீச்சருக்குத் தெரியாது. கோட்டுக்க எழுதோணும் எண்டு பேசிக்கொண்டும் காதைப் பிடிச்சுக்கொண்டும் நிற்பா. எண்டாலும் நாளைக்குக் கொப்பி முடியும்தானே என்ற நினைப்பு சுகமாத்தான் இருந்தது. கொப்பி முடிஞ்சிருந்தது. பள்;ளிக்கூடம் விட்டோண்ண வெளியில ஒடினன். கிழவியட்ட ஆரோ இரண்டு பெடியள் காசைக் கொடுத்து வாங்கிக்கொண்டு நிண்டினம். கிழவி கொப்பிக்கு எனக்குத் தரும் எண்டு நிpனைச்சிக்கொண்டே நீட்டினன். இந்தாடாப்பா எண்டு ஒரு சரை நாவல்பழத்தைச் சுற்றித் தந்தா. அதைப் பிரிச்சுச் சாப்பிட்டுக்கொண்டு நடக்கத்தொடங்கினன். 'நாளைக்கு எழுதத் தொடங்கிற கொப்பி வேளைக்கு முடியோணும் கனக்க எழுதத் தாற ரீச்சர் எங்களுக்கு வரவேணும்'
இ) எனக்குள் அது ஒரு பெருங்கனவைப் போல் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கின்றது. ஒரு சுடரைப்போல என்னுடன் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்பாவின் கதையை ஒரு நாவலாக்கவேண்டும் என்பதுதான் அது. அப்பாபிறக்கப் போற நேரத்தில அப்பப்பா ஓடிப்போய் வைரவர் கோயில்ல ஒரு சுடர் ஏற்றினவராம் 'நல்ல பிள்ளையாப் பிறக்கோணும் எண்டு' அப்பா செத்த அண்டைக்கு அவற்ற தலைமாட்டில ஒரு சுடரை ஏத்தி நாங்க வைச்சனாங்கள். அந்தச் சுடரில் இருந்து இந்தச் சுடர்வரைக்குமான அப்பான்ரை வாழ்க்கை அந்த இருளை வெளிச்சத்தை வெளியில கொண்டுவர எத்தனையோ நாளாக நானும் முயல்கிறேன்.
தூண்டிற் புழுவினைப் போல
வெளியே சுடரினைப் போல்
நீண்ட பொழுதாக என்
நெஞ்சம் துடித்ததடி
என்று பாரதி காதலில் பாடியது என் நாவலிற்கும் பொருந்துவதாய் உள்ளது. ஒரு கொப்பியை இதற்கென்றே எடுத்துவைத்தேன். எழுதத் தொடங்கினேன்தான். ஆனால் அது சில நேரம் கட்டுரைபோல மாறிவிடும். சிலநேரம் முயலாகும். சிலநேரம் ஆமையாகும். ஆமை வருவது வீட்டுக்குத்தானே கூடாது நாவலுக்கு நல்லதுதானே என்று சில நேரம் ஊறட்டும் என்று காவல் இருப்பேன். ஆனால் எழுதியவை திருப்திதராமல் போகக் கிழித்து எறியத் தொடங்கினன். வாங்கி வைத்த கொப்பியில் இன்னும் நாலுபக்கம்தான் இருக்கிறது. புதுக்கொப்பிவாங்கத்தான் வேணும்.
ஈ)
இரண்டு நாவல்களுமே நினைவைத் தருகின்றது. நாவல் பழம் ஒரு காலத்திற்குரியது. நாவலும் ஒரு காலத்திற்குரியதுதான். பொக்கற்றுக்க வைச்சு நான் நாவல்பழம் சாப்பிட்டதாலேயோ என்னவோ நாவலிலும் பொக்கற் நாவல் இருக்குது பாருங்கோ. எங்கன்ரை பக்கத்து வீட்டில முன்னுக்கு ஒரு நாவல் நிண்டது. அதை ஒரு அளவோடு வெட்டி அந்த நாவல்ல ஜம்புமரத்தை ஒட்டுக்கன்றாக்கி இப்ப நல்லாக் காய்ச்சுக்கொட்டுது. நானும் நாவல ஒடடுக்கன்றாக்கி சிறுகதை, கவிதையாவது எழுதுவம் எண்டு பாக்கிறன்.

Monday, October 10, 2016

இனிப்புக் கதைகள்


தருமராசா அஜந்தகுமார்
அ)
1989
எங்கன்ரை வீட்டுக்கு முன்னாலதான் அந்தக் கடை இருந்தது. எனக்குக் காலைமை எழும்பின உடன அந்தக்கடைக்குப் போய் ரொபி வாங்கிறது சரியான விருப்பம். திடீரென நாயெல்லாம் பயங்கரமாக் குரைக்கத் தொடங்கியது. என்னெண்டே விளங்கேல்ல. கேற்றைத் திறந்து எட்டிப்பார்த்தேன,; பயந்துபோனன். பெரிய பெரிய சப்பாத்துகளோட தலைப்பாவோட குடுமியோட பெரிய இரும்புத் தொப்பியோட ஆமிக்காரர். அவங்கள் நேரே போய்க்கொண்டிருந்தாங்கள். கடை திறந்திருந்தது.  கடை வேலவனைக் காணல்ல. அவங்கள் தாண்டிப்போனதும் கடைக்கு ஓடிப்போனன். அவற்ற முகம் பயத்தில வேர்த்திருந்தது. நான் ஐஞ்சு ரூபாவை நீட்டி ரொபி தாங்கோ எண்டன். 'உனக்கு இப்ப ரொபியோ? போய்க் கொப்பரட்ட வேண்டு' எண்டு பேசிப் போட்டார். எனக்குக் ஒரு மாதிரிப்போச்சு. சாக்குக்க கிடந்த ஒரு சக்கரைக்கட்டியை எடுத்துக்கொண்டு வீட்ட ஓடிவந்திட்டன். அம்மா சரியான பேச்சு. திடீரெண்டு எங்கேயோ வெடிச்சத்தம் கேட்டிச்சு, ஆக்கள் றோட்டால குழறிக்கொண்டு ஓடுறது கேட்டிச்சு. நான் அம்மாக்குப் பின்னால நிண்டன் அப்பா தலையைத் தடவிக்கொடுத்தார். எனக்குப் பயத்தில அழுகை அழுகையா வந்தது. கனநேரத்திற்குப் பிறகு எல்லாம் அமைதியாச்சு. தலையைச் சொறிவம் எண்டேக்கைதான் கையைப் பார்த்தேன். சர்க்கரை உள்ளங்கை எல்லாம் கரைஞ்சுபோய் பார்க்க அருவெருப்பாக இருந்தது. ஓடிப்போய்க் கையைக் கழுவிப் போட்டுத் தலையைச் சொறிஞ்சுகொண்டு நிண்டன். அப்பா கிட்டக் கூப்பிட்டுத் தலையைத் தடவிவிட்டார். அவற்றை கையை நான் இறுக்கிப் பிடிச்சன். சர்க்கரை கரைஞ்சமாதிரி என்ரை கண்ணில இருந்து தன்ரை பாட்டில கண்ணீர் வந்தது.
ஆ)
1994
பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அந்தக்கடைக்குப் போய்ப் பத்து ரூபாக்கு ரொபி வாங்கினன். பத்து  மைலேடி ரொபி. வீட்ட நோக்கி நடக்கத் துவங்கினன். ரொபி தின்னேக்கை எனக்கு தனியே நடக்கோணும் போல இருக்கும். ஆக்கள் நிக்கேக்கை எண்டா அவங்களுக்குத் தெரியாமல் பொக்கற்றுக்க கையை விட்டு அதுக்கை வைச்சுச் சத்தம் போடாம உரிச்சு வெற்றிகரமா அதைப் பொக்கற்றுக்கு வெளியால எடுத்து தலையைச் சொறிஞ்சு பிறகு வாயடியில சொறியிற மாதிரிச் சொறிஞ்சு டக்கெண்டு கொட்டாவிவிடுற மாதிரி வாயைத்திறந்து ரொபியை உள்ளுக்கை தள்ளி பேந்து அதை உமியேக்க ஆரும் கண்டா ஒண்டுதான் இருந்தது எண்டு சொல்லி அமசடக்காச் சிரிக்கோணும். தனிய எண்டா உரிச்சு உரிச்சு திண்டு கொண்டே இருக்கலாம். ரொபித்தாளை வடிவா விரிச்சிட்டு அதை ஊதிவிட அது பறக்கிறதப் பார்த்துக்கொண்டே அடுத்த ரொபியை உரிக்கத் தொடங்கலாம். ஒன்பது ரொபியும் வீட்ட போறதுக்கிடையில் திண்டிட்டன். கடைசி ரொபியைப் பக்குவமா எடுத்தன். ஆறுதலா உரிச்சு வாயுக்கை போட்டு உமிழத் தொடங்கினன். இவ்வளவு நேரமும் அவசரப்பட்டு கடிச்சுத் திண்ட எனக்கு இது அமிர்தம் போன்ற சுவையைக் காட்டத் தொடங்கியது. உமிழ உமிழ முடிகிறதே எண்டு கவலையும் வந்தது. அடிவரையான சுவையும் முழுதாகப் புலப்படத் தொடங்கியது. இனிமை. இனிமை. இனிமை.
இ)
1996
என்ரை இடக்கையை அவர் இறுக்கிப் பிடித்திருந்தார். எனக்குக் காற்சட்டை நனைஞ்சிடும் மாதிரிக் கிடந்தது. அவருடைய முகம் எனக்கு விகாரமாகத் தெரிந்தது. அவர் பற்களை நெறுமிக் கொண்டார். அவருடைய வலக்கையில்; ஒரு தடித்த குட்டிப் பிரம்பு இருந்தது. 'உனக்கு களவெடுத்து இனிப்புத் தின்னக் கேக்குதோ?' எண்டு அடிக்கத் தொடங்கினார். உள்ளங்கையில் இடிவிழுவதைப் போல இருந்தது. கண் கரையிற மாதிரிக் கிடக்கு. திடீரெண்டு பார்த்தன் ஜன்னலுக்குள்ளால பொன்னம்மா அக்கா எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறது தெரிஞ்சது. எனக்கு பெரிய மானக்கேடு ஆகிற மாதிரிக் கிடக்கு. இப்ப கையை விட்டார். அவர் என்ரை மாமா. நான் நல்லாப் படிக்கோணும் எண்டுட்டு இவற்ற வீட்டை கொண்டு வந்து விட்டவர். எனக்கு இங்க வந்தோண்ண ரொபி சாப்பிட வழி இல்லாமல் போச்சு. அண்டைக்கு சாமியறைக்க கும்பிடேக்கைதான் பார்த்தன். ஒரு அம்பது ரூபா கனகாலமா அங்க கிடக்கு. அதைச் சுருட்டி எடுத்து விளையாட்டுக் காட்டிப் போட்டன். இந்தாள் பிடிச்சுப் போட்டுது. அன்ரி கொண்டந்து தேத்தண்ணி தந்தா, வாங்கினனன். நல்லாச் சுட்டுது. குடிச்சன் இனிப்புக் காணாமல் இருந்தது. நான் ஒண்டும் சொல்லாமல் குடிக்கத் தொடங்கினன்.
ஈ)
இனிப்பு என்பது நாவில் மட்டுமல்ல உள்ளத்திலும் இனிப்பது. சில விடயங்கள் வெளியில் இனிக்கின்றன. சில விடயங்கள் உள்ளில் இனிக்கின்றன. நினைவுகள்,இலக்கியம் கூட இனிக்கவே செய்கின்றது. சில கனவுகளும் இனிக்கின்றன. எமது செயல்களும் இனிக்க வைக்கின்றன. உண்டு வரும் மகிழ்ச்சியை விட உள்ளத்தே நினைத்துவரும் மகிழ்ச்சி மேலானது. இதனை வள்ளுவர் காமத்துப் பாலில், 'உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.'(உள்ளுதல் - நினைத்தல்) என்கின்றார். இதனையே இன்று நினைத்தாலே இனிக்கும் என்கிறோம்.  நாமே நமக்கு இனியராய் இருப்பதும் நம்மிலும் இனியன் என்று இறைவனை அடையாளம் கொள்வதும் ஆத்மிகத்தின் அலைவரிசையாகிறது. இதனை அப்பர் சுவாமிகள்,
 'என்னில் யாரும் எனக்கினி யாரில்லை
 என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்
 என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
 என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.' என்று பாடியுள்ளார். மொழி, கலாசாரம், வாழ்வு எல்லாமே          நமது விருப்புகளால் இனிமையாகின்றன. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறான் பாரதி.  பாரதிதாசனுக்கு எல்லா இனிமையை விடவும் தமிழே இனித்தது. வாழ்வே இனிமைதான். அதிலும் இன்பம் மட்டுமல்ல துன்பமும் ஒரு அனுபவ இனிமைதான். இனிமை நாவிலும் வாழ்விலும் கணந்தொறும் கணந்தொறும் கலந்து அனுபவிக்க வேண்டியது.  கடலின் அலை போல காதலுடன் ஓடி வந்தபடியே இருக்கிறது. கால்களில் பரவும் ஈரம் தலையில் ஏறி வானத்தை எம் கையில் வீழ்த்திச் சிரிக்கிறது.

Sunday, October 2, 2016

எங்கேயும் எப்போதும்

தருமராசா அஜந்தகுமார்


அ) பெண் போராளி ஒருவரின் கையில் இருக்கும் துப்பாக்கி போல அவர் அதை நீட்டிக்கொண்டிருந்தார்.
பஸ் கண்டியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. மலையின் எழிலும் அது தரும் பயமும் சேர்ந்து 'ஏறிக்' கொண்டிருக்கும் போதுதான் இது நடந்தது.
என்னைப் பார்த்துச் சொன்னார், இண்டைக்கு இவனுக்கு இதாலே குத்தாமல் விட மாட்டன். என்னிலும் வாடலான ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒராள் அதே ஐம்பதில் நிற்கும் அம்மணிக்கு பின்னாலே நின்றார். தன்னைப் பற்றித்தான் அந்த மனிசி கதைக்குது எண்டு தெரிந்தோ தெரியாமலோ அந்த மனுசன் பஸ் ஏறும் குலுக்கலுக்கு நடுங்கிப் பின்னாலே முன்னாலே வருவதும் போவதுமாய் நின்றார்.
மனிசி எனக்குக் காட்டின நேராக்கின ஊசியை அவர் வரும் வழிக்காகக் காத்திருக்க வைத்தார். அது ஏறிவிட்டது. எங்கே ஏறியது என்பதை என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கண்ணில குத்தின மாதிரி அந்த மனுசன்ர கண் முழிசி ஏன் குத்தினது என்ற கேள்விக்குறியோடு தவிச்சது எண்டதை மட்டும் கவனிச்சன்.
ஆளுக்குச் சொன்னன் 'ஐயா கொஞ்சம் தள்ளி நில்லுங்க' எண்டு. அது ஆருக்கான பாதுகாப்பு என்பதையும் எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியேல்ல.
மனிசின்ர முகத்தைக் கவனிச்சன். பரம திருப்தி. ஊசியைக் காணல்ல. 'இவங்களுக்கு இதுதான் செய்யோணும் எண்டா'.
நான் மிக்க 'மரியாதையோடு' புன்னகைத்தேன்.
பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆ) 'தம்பி பின்சீற்றிருக்குப் போய் இருங்கோ'
பின்சீற்றை நோக்கி 'முன்'னேறினேன்.
இரண்டு பேர் இருந்தார்கள். இரண்டு பேரும் கரை ஜன்னலில் இருந்தார்கள். தொங்கலில் ஓர் ஆச்சி. அடுத்த தொங்கலில் ஒரு பெடியன். பெடியன்ரை முகம் ஒரு 'சுழிப்பில்' இருந்தது.
நடுவில் இருந்தன். அப்பதான் எனக்கு விளங்கிச்சு. அம்மாட்ட இருந்து 'மீன்வாசம்' தவழ்ந்து வந்தது.
சுருங்கிய கன்னம், இடுங்கிய கண்கள், நெரிஞ்சுபோன உடல்.
'எங்கே போட்டு வாறியள் அம்மா'
'உதயனுக்குப் போட்டு வாறன்' கையில இரண்டு மூன்று உதயன் பேப்பர் இருந்தது.
என்ரை மூண்டு பெடியங்கள்ள இரண்டு பேரை கடலுக்கை தொழிலுக்குப் போகேக்க சுட்டுப் போட்டாங்கள் ராசா. கண்கள் நனைந்திருந்தன.
என்ரை கடைசி வெளிநாட்டுக்கு ஒரு மாதிரிப் போட்டான். அவனுக்கு அங்க காட் கிடைக்கிறதுக்கு தமையன்மாரைப் பற்றி வந்த செய்தியைக் காட்டுறது நல்லதாம். பாவம் பெடி அங்கை நிண்டு கஸ்டப்படுகுது. அவவின்ரை நாத் தளுதளுத்தது.
பேப்பரை எனக்குக் காட்டினா. எனக்கு அந்தரமா இருந்தது. இப்ப மீன் மணக்கேல்ல.
பஸ் ஓடிக் கொண்டிருந்தது.
இ)
மட்டக்களப்பில் இருந்து இரவு 9.30 இற்கு பஸ் வெளிக்கிட்டது.
நாங்கள் மூன்று நண்பர்களும் சொகுசாக அமர்ந்து கொண்டோம்.
நான் பஸ்ஸில் ஏறியதும் கையில இருந்த புத்தகத்தையும் பிறகு முகப் புத்தகத்தையும் பார்த்தேன்.
கொஞ்ச நேரத்தாலே நித்திரையாப் போனன்.
பக்கத்திலிருந்த நண்பர் தட்டி எழுப்பினார். பஸ்ஸின்ரை ஓட்டத்தைப் பார்றா எண்டு. எங்கேயோ தலைதெறிக்க ஓடுற மாதிரிக் கிடந்தது. திடீரென்று எழும்பினதாலோ என்னவோ பயமாக் கிடந்திச்சு.
நேரத்தைப் பார்த்தேன் 11.30.
அதிக திருப்பங்களைக் கொண்டிருந்தது அந்தப் பாதை என்று விளங்கியது. ஒவ்வொரு திருப்பத்திலயும் என்ரை கையிலதான் பஸ் இருகென்றுமாதிரி நானும் டிரைவர் போலாகினேன். கொண்டக்டர் முன்சீற்றில இருந்து நல்ல நித்திரை.
கொஞ்சத்தூரம் போக றோட்டுக் கரையா இருந்த பற்றைகள் எல்லாம் எரிஞ்சுகொண்டிருந்தது. பெரிய நெருப்பு. என்ணெ;டே தெரியேல்ல. பஸ்சும் நிற்கேல்ல. அந்த வெளிச்சத்திலதான் பார்த்தேன். எனக்கு இடப்பக்க நேர் சீற்றுக்குப் பின்னாலே ஒரு பெடியனும் பெட்டையும். அவனின் நெஞ்சில் அவள் படுத்திருந்தாள். ஆனால் முழிப்பு எண்டு தெரிஞ்சது அவனின்  இடக்கை அவளை வளைத்திருந்தது. சில நொடிதான் திரும்பிவிட்டேன்.
ஆனால் என் கண் கள்ளத்தனமாக அவர்களை அடிக்கடி பார்த்துக்கொண்;டது. பஸ்ஸின்ரை வேகத்தையோ றோட்டின் பயங்கரத்தையோ மறந்துபோனன். பக்கத்தில இருந்தவங்கள் வாயைப் பிளந்து நித்திரை.
பஸ்; ஓடிக்கொண்டிருந்தது.

ஈ)பயணங்கள் தரும் அனுபவங்கள் அலாதியானவை. புகைவண்டியில் பஸ்வண்டியில் விமானத்தில் நடைப்;;பயணத்தில் அவை தீராக்காதலுடன் எம்மை அணைத்துக்கொள்கின்றன. பயணங்களில்தான் சுஜாதா அதிகம் எழுதியிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். எனக்குத்தெரிய பஸ்ஸில குறிப்பெடுப்பவர்களும் இருக்கிறார்கள். பரீட்சைக்குப் படித்துக்கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். தொலைபேசிக்குள்ளே தொலைந்து போகிறவர்கள் இன்று அதிகம். மனிதர்களைப் படிப்பதுதான் பேரனுபவம். வாழ்க்கையில் வளைவு நெளிவு நேர்ப்பாதைகளில் அவை எம்மை அழைத்துச் செல்கின்றன. எங்கேயும் எப்போதும் அனுபவங்கள் விபத்தைவிடவும் அதிகம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.



Tuesday, September 20, 2016

தூங்காமனம் - தருமராசா அஜந்தகுமார்

   
  
அ)
மாட்டுத் தாவணி பஸ்நிலையத்தில் அந்த நடுச்hமத்தில் வந்து இறங்கினோம். அப்பொழுதுதான் காலைப் பொழுது என்பது போல் வெகு உற்சாகமாக இருந்தது மதுரை மாநகரம்.  மதுரையின் இன்னொரு பெயரான தூங்காநகரம் என்பதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் தெளிவாகப் புரிந்தது. எனினும் கள்வர்களின் பயம் பற்றியும் சிலர் பயமுறுத்தி இருந்தததால் பைகளை இறுக்க அணைத்தபடி நடந்தோம். சாதாரண அறையில் தங்குவது இல்லையென்று முடிவெடுத்து தூரத்தில் பார்க்கும் போது டிஜிற்றல் பெயர் ஓடிக்கொண்டிருக்கும் வசதியான ஒரு ஹோட்டலில் அறையெடுத்து நிற்போம் என்று முடிவெடுத்தோம். ஒரு ஹோட்டலை நோக்கி எங்கள் கால்கள் விரையத் தொடங்கின.
வாகனங்களின் இரைச்சலைவிட மனதில் இரைச்சல் அதிகமாக இருந்தது. நாளை காலையிலேயே நாங்கள் சென்றுவிடுவோம் என்பதை வரவேற்பிற்கு நின்றவருக்கு எடுத்துக் கூறிப் பதிவினை நிறைவு செய்ய,  திறப்பொன்றுடன் எங்களுக்கு முன்னால் ஒருத்தர் சென்று கொண்டிருந்தார். அவர் அறையைத் திறந்து காட்டினார். இரண்டு கட்டில்கள், ஒரு சின்ன மேஜை, ரீ.வி எல்லாமே இருந்தன. நுளம்புத் திரிக்குப் பதிலாக புழழன niபாவ ஐத் தந்து புளக்கில் போடுமாறு கூறிவிட்டுச் சென்றார். ரீ.வியை போட்டுவிட்டோம். சன் நியூஸ் போய்க்கொண்டிருந்தது. டெங்கு பற்றிய செய்தியும் போய்க்கொண்டிருந்து. புழழன niபாவ போட்டுவிட்டேன். ஜன்னலைத் திறந்து பார்த்தேன். பெரிய அந்தக் ஹோட்டலின் பின்புறம் முழுவதும் பற்றையாக இருந்தது. ஜன்னலை மூடிவிட்டு நானும் நண்பரும் படுத்தோம். என்னை அறியாமல் தூக்கம் கண்களைத் தழுவியது. ஆனால் சிறிது நேரத்தால் நித்திரை கலைந்தது.ஒரே நுளம்பு. போர்த்திப் பார்த்தேன். சரிவரவில்லை. நண்பரைப் பார்த்தேன் அவரும் சொறிந்து கொண்டே இருந்தார். கடியும் சொறியுமாய் எப்ப விடிந்தது என்று தெரியாமலே விடிந்துவிட்டது. கதவு தட்டிக் கேட்டது. இரவு கூட்டிவந்து விட்டவர் நின்றார். என்ன அண்ண ஒரே நுளம்பு என்று சொல்லத் தொடங்க, ஐயோ சொறி சேர்! அதைத்தான் சொல்ல வந்தனான்,  குட்நைட்டிற்குள்  றீபில் வைக்க மறந்து போனன். 'ஸாரி சார் ஸாரி' என்றான். அவன் சொன்ன சொறி இரவு முழுவதுமான சொறியை மாற்றிவிடவும் தூக்கத்தைத் தந்துவிடவுமா போகிறது???
தூங்காநகரம் எங்களுக்குக்கும் தூங்காநகரம் என்பதை நிரூபித்துக் கம்பீரமாக நின்றது!


எனது கால்களின் கீழ் பூனையின் வயிற்றுப் பகுதி நசிபட அது வாயைத் திறந்து பெரிதாகக் கத்தியது அதன் கண்கள் மிகப் பயங்கர ஒளியை வீசின. கால் அமத்தலில் இருந்து விடுபட்டுக் கொண்டு அது என் முகத்தை நோக்கி ஒரு புலியைப் போல் பாய்ந்தது. ஐயோ!
என் முகமெல்லாம் இரத்தம் வழிவது போல் இருந்தது. இரண்டு கையாலும் துடைத்தேன். இரத்தம்; போலப் பிசுபிசுக்க என் நெஞ்சமெல்லாம் துடித்தது. நான் ஒரு பூனையின் வயிற்றுக்குள் இருப்பது போன்ற பிரமை சுழன்றது.
கட்டிலில் இருந்து கீழே இறங்கினேன்!
டேய்! டேய் என்ர கால்றா எண்ட சத்தம் அதன் பிறகுதான் எனக்கு விளங்கியது , அது கனவு. அந்த இரவை அன்றைய கனவு குலைத்துப் போட்டது. அன்றுடன் அந்த அறையில் இருந்து கட்டில் விடைபெற்றுக் கொண்டது.
அன்று என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. ஒரு பூனையைப் போல் இரவு முழுவதும் நண்பர்களின் கால்களை மாறி மாறி மிதித்து பேச்சு வாங்கிக் கொண்டும் நடந்து கொண்டிருந்தேன்!
இ)
நிலத்தில் படுத்திருந்தேன். திடீரென ஒரு சுணைப்பு. கைகள் தாமாகவே தொடையை வேகமாகச் சொறியத் தொடங்கின. சொறிந்த இடங்கள் தடிப்பதை உணர்ந்தேன். திடீரெனத் துள்ளி எழுந்தேன். கட்டியிருந்த சாறத்தை உதறினேன். சிறிய  மயிர்கொட்டி ஒன்று ஒட்டியிருப்பதைக் கண்டதும் மனம் துணுக்குற்றது.
கதவைத் திறந்து ஓடிச் சென்று கிளுவம் தடியொன்றை முறித்து அதன் இலைகளை உருவி கடித்த, தடித்த இடங்களெல்லாம் தேய்க்கத் தொடங்கினேன். தேய்த்து முடித்ததும் இன்னும் சொறி அதிகமாவது போல் ஒரு வேதனை படர்வது போல் உணர்ந்தேன். அம்மாவைத் தட்டியெழுப்பாமல் சுடு சாம்பல் பூசினால் நல்லது என்று எப்பவோ அம்மான்ர வாயால கேட்டது ஞாபகம் வர குசினிக்கு ஓடிப்போய் அடுப்படிச் சாம்பலை தொட்டுப் பார்த்தேன். மெல்லிய சூடு இருந்தது அதை எடுத்துத் தேய்க்கத் தொடங்கினேன். தேய்க்கச் சுகமாகவே இருந்தது. நிற்பாட்டியதும் சொறிந்த இடங்களில் மெலிதாக ஏற்பட்ட காயங்கள் சாம்பலில் இன்னும் கொதிப்பதை உணர்ந்தேன். ஒரே வழிகுளிப்புத்தான் எண்டு முடிவெடுத்து தொட்டித் தண்ணிய எடுத்து அள்ளி வார்க்கத் தொடங்கினேன். சுகமாகத் தான் இருந்தது. குளித்து முகத்தைத் துடைத்து விட்டு நேரத்தைப் பார்த்தேன்.
இரவு 1.40
ஆனால் இப்போது எங்கிருந்தோ ஓர் உற்சாகம் வந்திருந்தது. எதையாவது எழுதவேண்டும் போல் மனமும் கையும் பரபரத்தன.
நெடுநாளாக எழுத இருந்த சிறுகதை என்னை அறியாத ஒரு வேகத்துடன் தாள்களில் ஓடத்தொடங்கியது!
ஈ)
தூக்கம் என்பது ஒரு விழிப்பு நிலை என்கிறது பரந்தாமனின் பள்ளி கொள்ளும் தோற்றம். விழிப்பு நிலை கூட சிலருக்குத் தூக்கநிலைதான். தூங்குதல் என்றால் காலம் தாழ்த்துதல் என்ற பொருளும் அடங்கி இருக்கிறது. இதனை தூங்குக தூங்கிச் செயற்பால என்ற வள்ளுவன் வரிகள் உணர்த்திவிடுகின்றன. எம்மைச் சுற்றி நடக்கின்ற கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு தூக்கநிலைதான். பதினான்கு வருடங்கள் இராமனுக்காக கண்ணை இமை காப்பது போல விழித்திருந்த பார்த்த இலக்குவன் முடிசூட்டுவிழா நேரத்திலேதான் தன்னை அறியாமல் தூங்கினான். பாரமற்ற நிலையே உண்மையான தூக்கத்துக்கு இட்டுச் செல்கின்றது. படுக்கப் போறன், சாயப் போறன்,  கண்ண மூடப்போறன், சரியப் போறன், தூங்கப் போறன் என்று பல தொடர்களால் தத்தம் அனுபவத்திற்கேற்ப சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அடிமைத்தளையில் இருந்த பாரததேசத்திற்காகப் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாரதியார் பாடினார். இன்று இது எம் நாட்டுக்கும் தேவை போலத்தான் இருக்கின்றது.நாம் தூக்கத்தை மனதுக்குக் கொடுத்துவிடக் கூடாது. அது ஒரு விழிப்பு நிலையில் பூனையின் கண்களைப் போல எந்தச் சாமத்திலும் மினுங்கிக் கொண்டிருக்கவேண்டும்

Saturday, October 22, 2011

கி.அ.சச்சிதானந்தனுடன் ஒரு பொன்மாலைப் பொழுது

இன்று காலையில் அறிவோர் கூடல் குலசிங்கம் அண்ணர் அழைப்பினை ஏற்படுத்தி இன்று மௌனியின் கதைகளைப் பதிப்பித்து வெளியிட்ட அவருடன் நெருக்கமான கி.அ.சச்சிதானந்தன் வருகின்றார். எங்கள் வீட்டில்தான் 2 நாட்கள் நிற்கப் போகின்றார் . இன்று 5 மணியளவில் நண்பர்கள் அவருடன் கூடிக்கதைப்போமே என்றார். சரி என்றேன். நான் செல்வதற்கு 6 மணியாகிவிட்டது. 10 பேர் இருந்து அவருடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சற்றுநேரத்தில் குலசிங்கம் அண்ண, நீங்கள் கேளுங்கள் அவர் அது தொடர்பில் கதைக்கட்டுமே என்றார்.

பார்த்த உடனேயே கவரும் உருவம்..72 வயது  என்பதை நம்ப மறுக்கும் துடிப்பு, புன்னகை வீசியபடி வசீகரத்துடன் உரையாடத் தொடங்கினார்...குப்பிழான் ஐ.சண்முகன் மௌனி பற்றித் தொடங்கினார். அதன் பிறகு சச்சிதானந்தனின் பேச்சு மௌனியில் இறங்கி பின் தஸ்தாவெஸ்கி சென்று இமயமலை ஏறி ஆனந்தகுமாரசாமி என்று மிக அழகாக ஆழமாக அலட்டலின்றி எங்களை 2 மணிநேரம் கட்டி வைத்திருந்தார்.

அவர் பேசியவற்றில் மிக சுவாரசியமானவற்றை தொகுக்க முயற்சிக்கிறேன்.

1.மௌனி பற்றி....


மௌனி 16, 18 கதைகளை எழுதியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர். அவரைச்சுற்றி 10 பேருக்கு கிட்ட இருந்தாலும் அவருடன் இறுதிவரை இருந்தவன் நான். கதைகளை எழுதிக் குவிக்க வேண்டும் என்று பரபரக்க மாட்டார் எப்போதும் கதைக்காக மிகவும் பாடுபடுபவர். வெட்டி கொத்தி மிகவும் பண்படுத்தப் போராடுவார் .திருப்தியடையவே மாட்டார். அவரு்டைய கதைகளில் நாம் முடிவை எதிர்பார்க்கத் தேவையில்லை..முடிவை நோக்கிய அஞ்சலோட்டத்திற்கு அவர் கதைகள் காத்து நிற்பதில்லை. எமக்குத் தேவையான ஒரு பந்தியை வாசித்தாலே போதும் . எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்னும் போது அது எழுப்பும் உணர்வும் பரவசமும் சாதாரணமானதா?

தன்னால் தமிழுக்கு நிறைய செய்ய இருக்கிறது செய்ய வேண்டும் என்று பரபரத்தவர். அவருடனான எனது அனுபவங்கள் அலாதியானவை.

அ)
பிராமணன் தர்மம் செய்யக்கூடாது அது பாவம்

நானும் அவரும் ஹோட்டலுக்கு சாப்பிடப்போவோம்...கிறுக்காக இருப்பது அவருக்கு மிகவும்   பிடிக்கும்..இனிப்பு காரம் என்று மாறி மாறி இருவரும் சாப்பிடுவோம்...சாப்பிட்டு முடிந்தவுடன் பணம் நிரம்பிய தன் பர்ஸை என் கையில் திணிப்பார். நான் கல்லா மேசைக்கு சென்று பணம் கொடுக்க பர்ஸை திறக்கும் நேரத்தில் அதை அப்படியே பறித்துவிட்டு பிராமணன் பிச்சை எடுத்துத்தான் சாப்பிடணும் ஆனா தர்மம் செய்யக்கூடாது அது பாவம் என்று சொல்வார்..இப்படி எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?????

ஆ)
அப்பாவின் உண்மையைக் காப்பாற்றக் குடித்தேன்

மௌனியைக் கேட்டேன் நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்....“ எனது அப்பா ஒரு பொழுதும் பொய்பேசுதில்லை..ஒருநாள் யாருடனோ கதைக்கும் போது இவன் குடிக்கிறான் போல...என்று பேசுவதைக் கேட்டேன்...அதுவரை குடியாத நான் அப்பாவின் வார்த்தை பொய்யாகக் கூடாது என்று குடித்தேன்...” என்றார்.


இ)
முன்னறிவிப்பின்றி இனி மேல் வா

மௌனிக்கு ஒரு ஞாயிறு வருவதாகக் கூறியிருந்தேன். ஆனால் என்னால் அன்று செல்ல முடியவில்லை. அடுத்த நாள் சென்றேன். அவர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தார்.  ஏனென்று கேட்டேன். நீ நேற்று வருவதாகக் கூறியிருந்தாய்...நீ வரவில்லை..நீ வந்த ரெயில் அக்சிடன்ற் ஆகியதோ நீ செத்துவிட்டாயோ என்று எவ்வளவு யோசித்து விட்டேன் ..நீ இனிமேல் முன்னறிவிப்பின்றி வா என்று அவர் கூறிய போது அவருக்குள் இருந்த ஒரு மனிதனைக் கண்டேன்..


ஈ)
எழுதி உழைக்காத நான் மௌனி பற்றி பேசி உழைத்தேன்

என்னை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு 32 வயது இளைஞர் சந்திக்க வந்திருந்தார். மௌனி கதைகள் பற்றி ஆய்வு செய்யப் பொகிறேன் என்றார்....அவருடன் நான் நிறைய உரையாடி ஒத்துழைத்தேன். 10000 ரூபாய் தந்தார்.

இவ்வாறு பல அனுபவங்களைக் கூறியவர் மௌனியின் சொந்த வாழ்க்கையின் சோகங்களைக் கூறிய போது அவரது கண்கள் பனித்தன. 4 புதல்வர்களில் 2 புதல்வர்களை இழந்த புத்திர சோகத்தையும் ஒரு மகன் மனநோளாளியான அவலத்தையும் ஒரு மகனை அமெரிக்காவிற்கு சோதிடம் பார்த்து அனுப்பியதையும் கண்ணில் நீராடக் கூறினார். இறுதிக்காலத்தில் ஒரு நாள் சென்ற போது தவழ்ந்து வந்து கதவைத் திறந்த மௌனி இனி என்னைப் பாரக்க வரும் தேவை உன்க்கு இல்லை எனக் கூறியதாய் சொன்னார்.


2.
தஸ்தாவெஸ்கி

கீழைத்தேசத்தில் மௌனி பற்றிச் சொன்னீர்கள். இனி மேலைத் தேசத்தில் தஸ்தாவெஸ்கி பற்றிக் கூறுங்கள் என்று குலசிங்கம் அண்ணர் கூறியதும் சற்று கண்களை மூடிவிட்டு பேசத் தொடங்கினார்.

அ)  
இவரை மூலமொழியில் படிப்பதற்காகவே ரஸ்ய மொழியைப் படிக்க விரும்பினேன்

ஆ)
 இவரது நாவல்களை நான் மொழிபெயர்த்தும் இருக்கிறேன்....மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ளதை அப்படியே 100 வீதம் அப்படியே கொண்டு வந்துவிட முடியாது. க.நா.சு சொன்ன ஒன்று ஞாபகம் வருகிறது..” உயிரைக் காப்பாற்று்ம் வைத்தியர்கள் தாம் சித்தியடையும் பரீட்சையில் சித்திக்குரிய புள்ளியைப் பெற்றாலே போதும் 100 பெறவேண்டியதில்ல ...இதில் நாம் 65 வீதம் தேறினாலே சித்திதான்...படைப்பின் உயிரைக் காப்பாற்றி விடுகிறோம்”


மொழிபெயர்புகளை 1500 பக்கங்களைத் தொடும்போது பதிப்பிக்க முடியாமலட அல்லாடும் அனுபவங்களை தான் சலியாமல் எழுதிக்கொண்டே இருக்கும் தன்மையை மிக இரசனையாக எடுத்துரைத்தார்.



3.
இமயமலை


இவ்வாறு இவரது பேச்சு சென்று கொண்டிருந்த போது செல்லக்குட்டி கணேசன் அவர்கள் உங்கள் இமயமலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் என்றார்


சிறுவயதில் நான் செங்கல்பட்டில் படித்துக் கொண்டிருந்தபோது சனிக்கிழமைகளில் அங்கு ஒரு குன்று இருந்தது அதில் தனிமையில் சென்று இருக்கும் போது ஒரு பரவசத்தை உண்ர்ந்தேன். அந்தநாட்களில்தான் கடவுளைக் காணவேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றத்தில் இதற்காகவே ஒரு சாமியாரிடம் சேர்ந்தேன். அவரும் கடவுளை காட்டுகிறேன் என்று காட்டவில்லை.


இமயமலைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட அனுபவம் பரந்தது வார்த்தைகளுள் அடைபடாது..உயர உயர செல்லும் போது ஏற்படும் கிளர்ச்சியும் பனிக்கட்டிகள் சூரிய ஒளியில் வைரங்களாய் ஜொலிப்பதும் உயர் மலயில் நிற்கும் போது “நட்சத்திரங்கள் இதோ எட்டும் துாரத்தில் இருக்கின்றன..இந்த நட்சத்திரங்களைப் பறித்து விடலாம் பறிக்கலாம் என்று ஏற்பட்டது“ என்று அவர் கூறிய விதம் ஒரு கவிதானுபவத்தை எம்முள் கிளர்த்தியது.


4. கலாயோகி

உண்மையில் கொழும்பில் இந்துகலாசார அமைச்சில் நடந்தவிழாவில் கலாயோகி ஆனந்தகுமாரசாமி பற்றிப் பேசவே அவர் வந்திருந்தார். அவரின் முழு எழுத்துக்களும் தன்னிடம் உள்ளதையும் அதை பிரதி செய்ய இலங்கைப்பல்கலைக்கழக நுாலகங்களுக்கு கூறியதாகவும் சொன்னார். சுவாரசியம் என்னவென்றால் இவர் மீதான ஈடுபாட்டால் தனது மகனுக்கு ஆனந்தகுதாரசாமி என்ற பெயரையே வைத்தாராம். ஆத மாத்திரமன்றி மகனின் திருமண வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஆனந்த குமாரசாமி எழுதி தான் மொழிபெயர்த்த சிவானந்த நடனம் என்ற புத்தகத்தினை வழங்கியதாகவும் சிலர் இந்த வயதில் உங்கள் மகன் இப்படி எழுதியிருக்கிறானே என்று கூறியதாகவும் நகைச்சுவை ததும்பக் கூறினார்.

இவ்வாறு பல விடயங்கள் பற்றி கதைத்து இன்று மீனவர்களை பருத்தித்துறையில் சந்தித்ததையும் கூறினார்.அம்மாவிடம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க முடியாத இயலாமையையும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார். சசிகலாவின் வழக்கு பற்றி கதை வந்தபோது சசிகலாவின் வழக்கில் 8000 பக்கங்களில் குற்றப்ப்ததிரம் எழுதப்பட்டதாம். அதுவும் ஆங்கிலத்தில். இந்திய சட்டத்தில் உரிமை இருப்பதால் தானே வாதாடப் போவதாக கூறிய சசி தனககு ஆங்கிலம் தெரியாது என்றும் தமிழில் பெயர்க்கும் படிகூறியதாகவும் அந்தப்பணியால் அது குப்பைக்குள் சென்று விட்டது என்றும் பல விடயங்களிலும் இறங்கி எழுந்தது உரையாடல்..



நேரம் இரவு எட்டைத் தொடத்தொடங்கியது ...நீங்கள் கதைக்கவே இல்லை என்னோடு கோபமா என்று எல்லோரையும் தனித்தனியே வாஞசையோடு தழுவினார். இறுதியில் புகைப்படம் எடுத்துக் கலைந்தோம்...


உண்மையில் இன்றை பொழுது மிக ஆரோக்கியமாக நிறைந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த ஒருவருடன் கழிந்தது மிக்க நிறைவைத்தருகிறது...குலசிங்கம் அண்ணாவுக்கும் எல்லொருக்கும் நன்றிகள்

அன்புடன்
த.அஜந்தகுமார்
(குறிப்பெடுக்காது நினைவோடையில் இருந்து எழுதியதால் ஏற்பட்டிருக்க கூடிய சில பிழைகளுக்கு வருந்துகிறேன்)

Sunday, August 28, 2011

பிறந்தநாளில் நண்பனுடன் ஒரு மகிழ்வுத் தருணம்

இன்று எனது பிறந்தநாள் என்று எனது நண்பன் பிறின்ஸ் தனது திருமண அல்பத்துடன் வந்திருந்தான்.. மிகுந்த மகிழ்வுடன் இன்றைய நாள் கழிந்தது

Wednesday, January 27, 2010

நூல் வெளியீடு - புகைப்படங்கள்







த. அஜந்தகுமாரின்

ஒரு சோம்பேறியின் கடல் (கவிதைத் தொகுதி)
தனித்துத் தெரியும் திசை (ஆய்வு நூல்)

ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு 08.11.2009 நெல்லியடி தடங்கன் புளியடி மண்டபத்தில் பேராசிரியர் செ. கிருஷ்ணராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையினை சி. திருச்செந்தூரனும் அறிமுகவுரையை இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர். வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும்: நூல்கள் பற்றிய கருத்துரைகளை கலாநிதி த. கலாமணி, குப்பிழான் ஐ. சண்முகன்,க. அருந்தாகரன், ந. மயூரருபன் ஆகியோரும் நிகழ்த்தினர்.

நூலாசிரியர் முகவரி :-
த. அஐந்தகுமார், யார்வத்தை, வதிரி, கரவெட்டி,
mail: ajanthant84@yahoo.com